மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு, கரூர் விவகாரம் குறித்து அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..

கோவை தெற்கு தொகுதி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்று, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியாக இருந்தபோது கோவைக்கு தேவையான நிதிகளை திமுக அரசு வழங்கியதாக குறிப்பிட்டார். தற்போது தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு பிரச்சனை அதிகரித்து வருவதாக கூறிய அவர், அதற்கான தீர்வை அரசு இன்னும் கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார்.

மின் வாரியத்தில் முறையான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், உயரதிகாரிகளை மட்டும் அமைச்சர்கள் சந்தித்து வருவதாகவும், கடைநிலை ஊழியர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதுடன், மின்தடை குறித்த புகார்களுக்கு உதவி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டதாக நினைவுபடுத்தினார்.

மின்வாரியத்தில் டெண்டர் முறைகேடு நடந்ததாக கூறி குழு அமைக்கப்பட்டிருப்பதை விமர்சித்த அவர், நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் யாரும் எளிதில் தவறு செய்ய முடியாது என்றார். ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும் நிலையில், மின்வாரியத்தை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டதாகவும் கூறினார்.

ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தை குறிப்பிட்ட அவர், ஒரு அமைச்சரையே மிரட்டும் அளவிற்கு சிலருக்கு துணிவு இருந்தால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார். ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் தேவையற்ற பதற்றத்தை அரசு உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.

"அரசு மாறலாம், அதிகாரிகள் மாற மாட்டார்கள். மின்வெட்டுக்கு அதிகாரிகளையே காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது" என்று அவர் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு கால அவகாசம் கேட்பது நியாயமல்ல என்றும், சூலூரில் நடந்த துயர சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். மக்கள் தற்போதைய ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், "திமுகவை ஒழிப்போம் என்று கூறியவர்கள் அரசியலில் காணாமல் போயுள்ளனர். திமுக என்பது பெரிய ஆலமரம் போன்ற இயக்கம்" என்று தெரிவித்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் விமான நிலையத்திலோ, டெல்லியிலோ செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவரது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி விமர்சித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய அதே அணுகுமுறையையே தற்போது முதல்வர் தொடர்கிறார் என்றும் அவர் கூறினார்.

இன்று தேர்தல் நடைபெற்றால் திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் அளவிற்கு மக்களின் மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் கோவையில் பெரியார் நூலகம் திறப்பு முதல் நிகழ்வாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்ததாகவும், தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அந்த நூலகத்தை எப்போது திறப்பார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

இறுதியாக, கரூர் சம்பவம் தொடர்பாக தற்போதைய முதல்வரும் அமைச்சர்களும் பொறுப்புடன் செயல்படவில்லை என கடுமையாக விமர்சித்த அவர், திமுக நிர்வாகிகள் சிறைக்கு பயந்து அரசியல் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்