கோவை
வேளாண் டிராக்டர் தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டிராக்டர் உடன் வந்து போராட்டம் மேற்கொண்டனர்.
வேளாண்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய டிராக்டர் வாகனம் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் மேற்கொண்டு மனு அளிக்கின்றனர்.
டிராக்டர் வாங்கும் பொழுது ஜிஎஸ்டி வரி மற்றும் சாலை வரியை வசூல் செய்ய கூடாது, டிராக்டர்களுக்கு டீசல் போடும் பொழுது வாட் வரியை ரத்து செய்ய வேண்டும், விவசாய கருவிகளான பட்டியலில் வேளாண்மை டிராக்டர்களை இணைத்திட வேண்டும், வேளாண் டிராக்டர்கள் டீசலுக்கு முழு வரி விலக்கு கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராக்டர் உடன் வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். மேலும் மத்திய அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்